Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Expository Commentary on the Book of Ezra – வேதப் பாடம் 15
உங்கள் சிந்தனைக்கு.

Expository Commentary on the Book of Ezra – வேதப் பாடம் 15

சாலமோன் அரசன் தேவனுக்காக மிகப் பெரிய பிரம்மாண்டமான ஆலயத்தை கட்டினார். யூதர்களின் வரலாற்றில் மிக உயர்ந்த செழிப்பும் மகிமையும் கொண்ட காலத்தில் ஆட்சி செய்தவன் சாலமோன் அரசன்.
அவரது ஆட்சியின் செல்வச் செழிப்பில் கட்டப்பட்ட அந்த ஆலயம் சுமார் 373 ஆண்டுகள் நீடித்தது.

ஆனால் யூதா கோத்திரத்தின் கீழ்ப்படியாமையும், கடினமான மனமும் காரணமாக, தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் அவர்களை எச்சரித்தும் அவர்கள் தங்கள் வழிகளை விட்டு திரும்பவில்லை.

அதன் விளைவாக, அந்த தேசத்தை பாபிலோன் அரசன் நெபுகாத்நேச்சர் மூலம் ஆலயத்தை இடிக்க தேவன் அனுமதித்தார்.
வேத ஆதாரம்: 2 இராஜாக்கள் 25:8–9

இதற்குப் பிறகு தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளான எரேமியா மற்றும் எசேக்கியேல் மூலம் மக்களை எச்சரித்தார். அவர்கள் அறிவித்த கர்த்தருடைய வார்த்தைகள் பாபிலோனில் வாழ்ந்த யூதர்களின் மத்தியில் ஒரு அளவுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தின.

இதற்குப் பிறகும், தானியேல் ஜனங்களின் பாவங்களுக்காக தேவனிடம் மன்றாடி ஜெபித்தான்.
வேத ஆதாரம்: தானியேல் 9:3–5

மேலும், எரேமியா தீர்க்கதரிசி முன்பே சிறையிருப்பு வரப்போகிறது என்றும் அது 70 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அறிவித்திருந்தார்.
தேவனுடைய முன்னறிவிப்பின்படியும், மக்களுடைய மனநிலையைப் பார்த்தும், 70 ஆண்டுகள் முடிந்தபின் தேவன் தம்முடைய ஜனங்களுக்காக செயல்பட ஆரம்பித்தார். இடிந்து போன ஆலயத்தை மறுபடியும் கட்டுவதற்காக தேவன் பல பெரிய காரியங்களைச் செய்தார்.
பெர்சிய அரசன் கோரேசு ஆட்சி செய்த காலத்தில், செருபாபேல் தலைமையில் ஒரு குழு எருசலேமுக்கு திரும்பி ஆலயத்தை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக அவர் ஒரு அரசாணை பிறப்பித்தார்.

ஆலயக் கட்டுமானம் தொடர்பான முக்கிய நிகழ்வுகள்:
கி.மு. 538 – ஆலயத்தை கட்ட அனுமதி வழங்கப்பட்டது
கி.மு. 536 – பலிபீடம் கட்டப்பட்டது
பின்னர் எதிர்ப்பின் காரணமாக ஆலயப் பணிகள் நிறுத்தப்பட்டன
சுமார் 16 ஆண்டுகள் ஆலயப் பணிகள் நிறுத்தப்பட்டன
அதற்குப் பிறகு பெர்சிய அரசன் தரியு ஆலயப் பணிகளை மறுபடியும் தொடங்குமாறு ஒரு அரசாணை பிறப்பித்தான். பெர்சிய அரசர்களால் வழங்கப்பட்ட இரண்டாவது முக்கிய அரசாணை இதுவாகும்.

இதோடு இந்த வரலாறு முடிவடையவில்லை.
இதற்குப் பிறகு பெர்சிய அரசன் அர்தசஷ்டா ஆட்சிக் காலத்தில் எஸ்ரா தலைமையில் ஒரு குழு எருசலேமுக்கு வந்தது.
வேத ஆதாரம்: எஸ்ரா 7:1
இந்த குழு சாதாரணமாக வரவில்லை; மிகப்பெரிய வரலாற்றை மாற்றக்கூடிய ஒரு அரசாணையோடு அவர்கள் வந்தனர். அந்த அரசன் பிறப்பித்த உத்தரவு யூதர்களின் ஆலய வாழ்க்கையில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக இருந்தது.
அந்த அரசன் எழுதிய கடிதத்தை படிக்கும் போது, புறஜாதியைச் சேர்ந்த, ஆண்டவரை அறியாத ஒரு பேரரசன் தேவனுடைய ஆலயத்திற்காக இவ்வளவு விரிவான உத்தரவு பிறப்பித்தது நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டதாக தோன்றுகிறது.

அர்தசஷ்டா நேரடியாக ஆலயக் கட்டுமானத்தில் பங்கு பெறவில்லை. ஏனெனில் அவர் ஆட்சி செய்த காலத்திற்கு முன்பே ஆலயம் முடிந்துவிட்டது. ஆனால் அவர் செய்த பணிகள் மிக முக்கியமானவையாக இருந்தன.

அவற்றில் சில:
1. எஸ்ராவை எருசலேமுக்கு அனுப்பினார்
வேத ஆதாரம்: எஸ்ரா 7:11–26
தேவனுடைய நியாயப்பிரமாணத்தை கற்பிக்க அதிகாரம் வழங்கினார். இதன் மூலம் யூத சமூகம் ஆவிக்குரிய முறையில் சீரமைக்கப்பட்டது.

2. ஆலய சேவைக்கான பொருட்களை வழங்கினார்
பொன், வெள்ளி மற்றும் காணிக்கைகள் வழங்கப்பட்டன. ஆலய ஆராதனைக்குத் தேவையான பல பொருட்கள் கொடுக்கப்பட்டன.

3. ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் சலுகைகள் வழங்கினார்
வேத ஆதாரம்: எஸ்ரா 7:24
அவர்களிடமிருந்து வரிட வசூலிக்கக் கூடாது என்று கட்டளை வழங்கப்பட்டது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், அர்தசஷ்டா ஆலயத்தை கட்டவில்லை; ஆனால் ஆலய ஆராதனையும் தேவனுடைய சட்டமும் மீண்டும் நிலைநிறுத்தப்படுவதற்கு உதவினார்.

வரலாற்றில் ஒரு பேரரசு ஒரு சிறிய ஜனத்துக்காக இவ்வளவு பெரிய ஆதரவை அளித்த நிகழ்வு அரிதாகவே காணப்படுகிறது.
மூன்று முக்கிய அரசாணைகள் மூலம், நாடில்லாமல் அகதிகளாகவும் கைதிகளாகவும் வாழ்ந்த மக்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்பினர். தீர்க்கதரிசிகளின் சத்தத்தை கேட்டு தங்களை ஒப்புக்கொடுத்தபோது, தேவன் சொன்னபடி 70 ஆண்டுகள் முடிந்ததும் அவர்களை விடுவித்தார்.
அவர்களைத் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பினார்.

இடிந்து போன ஆலயத்தை மறுபடியும் கட்ட பணமும் ஆதரவும் வழங்கினார். அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டன. அதன் மூலம் அவர்கள் மறுபடியும் தன்மானத்தோடு வாழ ஆரம்பித்தார்கள்.

இரண்டாவது ஆலயம் சுமார் 500 ஆண்டுகள் நீடித்தது.
இந்த நிகழ்வை வெறும் வரலாற்றுச் சம்பவமாக மட்டும் பார்க்கக் கூடாது.
நான் இதைப் எப்படி பார்க்கிறேன்?
தமிழகத்தில் சபைகளின் வளர்ச்சியும் எழுப்புதலும் 1950களில் ஆரம்பித்து, சுமார் 30 ஆண்டுகள் பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் வளர்ச்சி பெற்றது.
ஆனால் அதன் பிறகு சபைகளில் ஏற்பட்ட ஆவிக்குரிய சரிவு, சபையைப் பற்றிய உலக *மக்களின் கண்ணோட்டத்தை மாற்றி விட்டது.
*பொருளாதாரத்தில் உண்மையின்மை
பரிசுத்தத்தில் பெரிய சரிவு*
தேவ வார்த்தையின் மீது உள்ள ஈடுபாட்டில் வீழ்ச்சி
சுயநலம்
ஜாதி வேறுபாடுகள்
தனிநபர் வழிபாடு
அரசாங்கத்திடம் தவறான கணக்குகள்
விசுவாசிகளை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் மனோபாவம்
விசுவாசிகளை அதிகாரமாக ஆளும் *அணுகுமுறை
இவ்வாறான பல சீர்கேடுகள் காரணமாக, தேவன்* நம்மை எச்சரிக்கும் சூழ்நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
ஒருகாலத்தில் சபைகளுக்கு ஆதரவாக இருந்த அரசாங்கங்கள் இன்று கண்டும் காணாமல் இருப்பது, அரசு அதிகாரிகளும்7 அரசியல்வாதிகளும் சபைத் தலைவர்களை ஆன்மிகத் தலைவர்களாக அல்லாமல் அரசியல்வாதிகளாக பார்க்கத் தொடங்கியிருப்பது போன்ற பல மாற்றங்கள் காணப்படுகின்றன.
இது தேவன் நம்மை ஒரு எச்சரிப்பின் வழியில் நடத்துகிறார் என்பதை நினைவூட்டுகிறது.
70 ஆண்டுகள் சிறையிருப்பில் இருந்தபோது யூதர்கள் தங்களைத் தாழ்த்தி தேவனிடம் திரும்பினார்கள். அதன் பிறகு சூழ்நிலை மாறியது.

அதேபோல் இன்று கிறிஸ்தவர்கள் தங்களைத் தாழ்த்தி மனந்திரும்பி தேவனிடம் திரும்பினால், சூழ்நிலைகள் மறுபடியும் மாறுவது உறுதி.
இதில் விசுவாசிகளுக்கும் பங்கு இருக்கிறது; தலைவர்களுக்கும் பங்கு இருக்கிறது.


தேவன் விரும்பினால், நம்முடைய உண்மையான மனமாற்றத்தைப் பார்த்து, தமிழகத்தில் இன்னும் பல “பெர்சிய அரசர்கள்” போன்ற ஆதரவாளர்களை எழுப்ப முடியும். அப்போது சபையின் வளர்ச்சி மீண்டும் ஒரு புதிய உச்சத்தை அடையும்.
The ball is in the court of the leaders as well as the believers.