Expository Commentary on the Book of Ezra –* வேதப் பாடம் 16
Expository Commentary on the Book of Ezra
வேதப் பாடம் 16
பழைய ஏற்பாட்டில் பல்வேறு வேத அறிஞர்கள் காணப்பட்டாலும், எஸ்ராவுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. மோசே தேவனிடமிருந்து நேரடியாக நியாயப்பிரமாணத்தைப் பெற்று, இஸ்ரவேல் ஜனங்களுக்கு அடிப்படை போதனைகளை அளித்தார். அதற்குப் பிறகு, வேதத்தை ஆராய்ந்து, அதன்படி தன்னை ஒழுங்குபடுத்தி, பிறருக்கு போதித்தவராக எஸ்ரா சிறப்பாக விளங்குகிறார்.
யார் இந்த எஸ்ரா?
எஸ்ரா பாபிலோனில் பிறந்தவன். அவன் வாழ்ந்த காலத்தில் யூதர்களுக்கான ஆலயங்கள் அங்கு இல்லை. இதனால், வேதத்தை முறையாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைந்திருந்தன. அக்காலத்தில் வேத சுருள்கள் அரிதாகக் கிடைத்தன; சிலரிடமே அவை இருந்தன. இத்தகைய குறைபாடான சூழ்நிலையிலும், எஸ்ரா மிகுந்த ஆர்வத்துடன் அந்த சுருள்களைத் தேடி, அவற்றை ஆராய்ந்து, வேதத்தை கற்றறிந்தான் என்று வேத அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவன் வெறும் கற்றறிவில் மட்டும் நின்றுவிடவில்லை.
அவன் வேதத்தை கற்றான், அதன்படி நடந்தான், மற்றவர்களுக்கு போதித்தான் (எஸ்ரா 7:10).
எஸ்ராவுக்கு தேவனுடைய வார்த்தையின் மீது அளவிலாச அன்பும், தீராத தாகமும்்க்கையில் இருந்தது. “எப்படியும் வேதத்தை கற்றுக்கொள்ள வேண்டும், அதன்படி வாழ வேண்டும், அதை மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும்” என்ற தீவிரம் அவன் உள்ளத்தில் எரிந்தது.
இந்த அணையாத ஆவிக்குரிய தாகத்தினாலேயே, உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றான பெர்சிய அரசாட்சியின் ராஜாவாகிய அர்தசஷ்டா, இந்த எளிய வேத போதகரை அடையாளம் கண்டு, இஸ்ரவேல் ஜனங்களை வேதத்தின் படி வழிநடத்த அதிகாரப்பூர்வமான அனுமதியுடன் அனுப்பினான்.
அர்தசஷ்டா எழுதிய கடிதத்தை வாசிக்கும் போது, தேவனை அறியாத ஒரு அரசனே கூட, யூதர்கள் வேதத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைக் காட்டியதை நாம் அறிய முடிகிறது.
இந்த புத்தகத்தின் 7 மற்றும் 8ஆம் அதிகாரங்களில் “கர்த்தரின் தயவுள்ள கரம் என்மேல் இருந்தது” (The good hand of the Lord was upon me) என்ற வாசகம் ஆறு முறை வருகிறது. இது ஒரு முக்கியமானப் ஆன்மீக உண்மையை எடுத்துக்காட்டுகிறது:
வேதத்தை ஆராய்ந்து, அதன்படி வாழ்ந்து, அதை மற்றவர்களுக்கு போதிக்கும் மனிதனுக்குச தேவனுடைய தயவுள்ள கரம் எப்போதும் துணை நிற்கும்.
எஸ்ரா ராஜாவைத் தேடி செல்லவில்லை; ராஜாவே அவனைத் தேடி வந்தான். இது தேவனுடைய கிருபையின் வெளிப்பாடு.
2500 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த உண்மை, இன்றும் பொருந்துகிறது.
வேதத்தை நேசித்து வாசித்து, ஆராய்ந்து, பிறருக்கு போதிக்கும் விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் அதிகமாக எழும்பினால், சமுதாயத்தின் ஆவிக்குரிய வளர்ச்சி நிச்சயமாக உயர்ந்த நிலையை அடையும்.
ஆனால், இன்றைய நிலை வேறுபட்டதாக உள்ளது. பலருக்கு வேத வசனத்தை தியானிப்பது ஒரு சுமையாகத் தோன்றுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கேட்கும் சுருக்கமான செய்தியிலேயே திருப்தி அடைந்து, தனிப்பட்ட வேதப் பயிற்சியை புறக்கணிக்கிறார்கள். இது தேவனுடைய சித்தமல்ல.
ஒவ்வொரு விசுவாசியும்:
வேதத்தை தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ள வேண்டும்
தியானிக்க வேண்டும்
வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும்
பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்
புதிய ஏற்பாட்டில், வேதத்தை அறிந்த விசுவாசிகள் மற்றவர்களுக்கு போதிக்கக் கூடாது என்று எந்தத் தடைமும் இல்லை. தேவன் அளித்த கிருபையின்படி, யாரும் போதிக்கலாம்.
சபைத் தலைவர்களும் விசுவாசிகளும் சேர்ந்து, வேதத்தை நேசிக்கும் தலைமுறையை உருவாக்கி, பல “எஸ்ராக்களை” எழுப்பினால், தேவனுடைய தயவுள்ள கரம் நிச்சயமாக சபையின் மீது வரும்.
முடிவுரை
வேதத்தை நேசிப்போம் – வாசிப்போம் – தியானிப்போம் – போதிப்போம் .