எஸ்ராவின் புத்தகம் – வேதப் பாடம் 12
உங்கள் சிந்தனைக்கு..
எஸ்ராவின் புத்தகம் – வேதப் பாடம் 12
*
சாலமோன் கட்டிய ஆலயமும் மறுபடியும் கட்டப்பட்ட ஆலயமும் — ஒரு பார்வை
சாலமோன் தன்னுடைய ஆட்சி காலத்தில் கடவுளுக்கென்று ஒரு பிரம்மாண்டமான ஆலயத்தை கட்டினான். மிகுந்த செல்வச் செழிப்புடன் ஆட்சி செய்த அந்த காலத்தில், மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஆலயமாக அது இருந்தது.
ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அதன் பிரதிஷ்டை நாளில்
*மாடுகள் – 22,000
ஆடுகள் – 120,000
ஆக மொத்தம் 142,000* மிருகங்கள் பலியிடப்பட்டன. இது மிகப்பெரிய தேசிய அர்ப்பணிப்பு விழாவாக இருந்தது.
(1 இராஜாக்கள் 8:63)
இந்த ஆலயம் சுமார் 373 ஆண்டுகள் நீடித்தது.
959 BC → 586 BC = சுமார் 373 ஆண்டுகள்
பின்னர் நேபுகாத்நேச்சார் ஆட்சி காலத்தில் அந்த ஆலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அதற்குப் பிறகு 70 ஆண்டுகள் கழித்து, கோரேசு அரசன் யூத ஜனங்களை தங்கள் நாட்டிற்கு திரும்ப அனுப்பி ஆலயம் கட்ட அனுமதி கொடுத்தான்.
அதன்படி ஆலயம் மறுபடியும் கட்டி முடிக்கப்பட்டது:
கி.மு. 516 (எஸ்ரா 6:15)
புதிய ஆலயத்தின் பிரதிஷ்டை நாளில் பலியிடப்பட்ட மிருகங்கள்:
மாடுகள் – 100
ஆடுகள் – 200
ஆட்டுக்குட்டிகள் – 400
பாவநிவாரணத்திற்கு ஆட்டுக்கடாக்கள் – 12
ஆக மொத்தம் 712 மிருகங்களே பலியிடப்பட்டன.
1,42,000 மிருகங்களின் பலியோடு 712 ஐ ஒப்பிடும்போது, இந்த பலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.
ஆனால் பலிகளின் எண்ணிக்கையை வைத்து ஒரு நிகழ்வின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. விசுவாசம், பக்தி வைராக்கியம், தைரியம் ஆகியவற்றையும் அற்பமாகக் கருத முடியாது.
பாபிலோனிலிருந்து அகதிகளாக திரும்பிய யூத ஜனங்கள் மிகுந்த பொறுமையுடனும் விசுவாசத்துடனும், காலங்கள் கடந்தாலும் கடவுளின் நேரம் வரும் வரை காத்திருந்து, தங்களுக்கு இருந்த திறமையினாலும் சக்தியினாலும் இந்த ஆலயத்தை கட்டி முடித்தார்கள்.
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும்.
கோரேசு மன்னன் யூத ஜனங்களை தங்கள் நாட்டிற்கு திரும்ப அனுமதித்தபோது, பல யூதர்கள் பாபிலோனில் இருந்த செழிப்பையும் வசதியையும் பார்த்து அங்கேயே தங்கி விட்டார்கள்.
ஆனால் தேவனுடைய ஆலயத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு சிறிய கூட்டம், கடவுளின் மீது வைராக்கியம் கொண்டு, அவருடைய ஆலயத்தை மீண்டும் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பினார்கள்.
அவர்கள் சுமார் 20 ஆண்டுகள் பல தடைகள் மத்தியில் காத்திருந்து அந்த ஆலயத்தை கட்டி முடித்தார்கள்.
சாலமோன் தன்னுடைய செல்வச் செழிப்பில் கட்டிய பிரம்மாண்ட ஆலயத்திற்கு சமமான மதிப்புடையதே இந்த மறுபடியும் கட்டப்பட்ட ஆலயம்.
சாலமோன் கட்டிய ஆலயம் செல்வச் செழிப்பின் வெளிப்பாடு.
ஆனால் மறுபடியும் கட்டப்பட்ட ஆலயம் நெருக்கடியிலும் உபத்திரவத்திலும், தங்களுடைய சக்திக்கு மீறிய அர்ப்பணிப்புடன் கட்டப்பட்ட ஆலயம்.
எனவே பிரம்மாண்டமான ஆலயங்களை பார்த்து மட்டுமே மதிப்பு அளிப்பதை நாம் விட்டு விட வேண்டும்.
சிறிய கிராமங்களில் இருந்தாலும், ஏழைகளால் இருந்தாலும், பக்தி வைராக்கியத்துடன் ஆண்டவருக்காக கட்டப்படும் சிறிய சபைகளும் கடவுளுடைய பார்வையில் மிகுந்த மதிப்பைப் பெறுகின்றன.
கடவுள் பலிகளின் எண்ணிக்கையில் பிரியம் கொள்வதில்லை.
ஆனால் பக்தி, வைராக்கியம், விசுவாசம், எளிமை, அர்ப்பணிப்பு, தியாகம் இவைகளின் மேல் கட்டப்படும் காரியங்களே கடவுளுடைய பார்வையில் உயர்ந்தவை .
செருபாபேல் கட்டிய இரண்டாவது ஆலயம் சுமார் 586 ஆண்டுகள் இருந்தது.
516 BC → AD 70 = சுமார் 586 ஆண்டுகள்
அதாவது *அதிகமான மிருகங்களை பலியிட்டு ஆரம்பிக்கப்பட்ட ஆலயம் 373 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
ஆனால் குறைவான பலிகளுடன் கட்டப்பட்ட இரண்டாவது ஆலயம் அதைவிட அதிக காலம் நீடித்தது.
எனவே கடவுளுடைய பார்வையில் பிரம்மாண்டங்களும் பலிகளின் எண்ணிக்கையும் முக்கியமல்ல என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்