எஸ்ராவின் புத்தகம் வேதப் பாடம் 11
உங்கள் சிந்தனைக்கு.
*எஸ்ராவின் புத்தகம்
வேதப் பாடம் 11*
தடைபட்ட சாலமோன் கட்டிய ஆலயப் பணிகள் மறுபடியும் தொடங்கியது.
இந்த நிகழ்வில் சபைகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:
பாபிலோனை ஆட்சி செய்த கோரேசு, தன் அடிமைகளாக கொண்டுவரப்பட்ட யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஜனங்களை மறுபடியும் இஸ்ரவேல் தேசத்திற்கு திருப்பி அனுப்பி, அவர்களுக்கு ஆலயத்தை மறுபடியும் புதுப்பிக்கக்கூடிய உரிமையை அளித்ததோடு மட்டுமல்லாமல், எருசலேம் தேவாலயத்தில் கைப்பற்றப்பட்ட விலைமதிப்புள்ள பொருட்களையும் கொடுத்து அனுப்பினார்.
கோரேசு அரசன் கிமு 538 ஆம் ஆண்டு ஆலயத்தை புதுப்பிக்க ஆணையிட்டான்.
கிமு 536 ஆம் ஆண்டு ஆலயப் பணி ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் அந்த ஆலயத்தின் சீரமைப்பு பணிகள் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே, சுற்றுப்புற எதிர்ப்பினாலும் ஜனங்களுடைய சுயநலமான காரியங்களினாலும் அந்தப் பணிகள் தடைபட்டன.
(எஸ்ரா 1:1–4; எஸ்ரா 1:7–11)
எதிரிகள் பாபிலோனிய அரசிடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகள்:
எஸ்ரா 4:15 – “அந்தப் பட்டணம் கலகக்காரமும் ராஜாக்களுக்கு விரோதமானதும் ஆக இருக்கிறது.”
எஸ்ரா 4:13 – “இந்தப் பட்டணம் கட்டப்பட்டால் அவர்கள் வரியும் கப்பமும் கொடுக்க மாட்டார்கள்.”
எஸ்ரா 4:15 – எருசலேமின் பழைய வரலாற்றை ஆராய்ந்தால் அது அரசருக்கு எதிராக இருந்த நகரம் என்று தெரியும் என்று எதிரிகள் ராஜாவிடம் கூறினர்.
எதிரிகளின் இந்தக் கடிததம் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அர்தசஸ்டா ராஜாவின் காலத்தில் இந்தப் பணிகள் தடைபட்டன. அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் ஆலயப் பணிகள் நடைபெறவில்லை.
“அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை நின்றுபோனது; அது பாரசீக ராஜாவாகிய தரியுவின் இரண்டாம் ஆண்டு வரைக்கும் நின்றது.”
எஸ்ரா 4:24
இந்த இடைவெளியில் அந்த யூத ஜனங்கள் பொறுமையாக காத்திருந்தார்கள். ஆலயப் பணிகளை ஆரம்பிக்க வாசலைத் திறந்த தேவன், அதை முழுமையாக கட்டுவதற்கும் வழி செய்வார் என்று நம்பி இருந்தார்கள்.
ஓராண்டல்ல, இரண்டாண்டல்ல 16 ஆண்டுகள் காத்திருந்தார்கள்.
இந்த இடைவெளியில் கடவுள் ஆகாய் மற்றும் சகரியா போன்ற தீர்க்கதரிசிகளை எழுப்பி, ஜனங்களை ஊக்குவித்தார். பிறகு ஜனங்கள் மறுபடியும் ஆலயப் பணிகளை ஆரம்பித்தார்கள்.
இதைக் கண்ட ஆளுநர் தத்தனாய் இதைப் பற்றி யூதர்களிடம் விசாரித்தார். அதற்கு யூதர்கள், தாங்கள் முதலில் கோரேசு அரசனுடைய ஆணையைப் பெற்று தான் இந்த வேலையை ஆரம்பித்தோம் என்றும், இதன் உண்மைத்தன்மையை அரசாங்க ஆவணக் காப்பகத்தில் சரிபார்க்கும்படி ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
எஸ்ரா 5:3
இதன்படி ஆளுநர் ஒரு நீண்ட கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதம் மிகவும் அருமையானது. பழைய அரசாங்கக் கடிதங்கள் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
எஸ்ரா 5:7–17
இதைவிட சிறப்பான காரியம் என்னவென்றால், கோரேசு அரசன் யூதர்கள் ஆலயம் கட்டுவதற்கான அனுமதி கடிதத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் தேவனுடைய இறையாண்மையையும், தேவனை அறியாத ஒரு அரசன் கூட யெகோவா தேவனை மதித்ததை வெளிப்படுத்துகிறது.
எஸ்ரா 6:3–12
ஆவணக் காப்பகத்தில் கோரேசு அரசன் எழுதிய பழைய ஆணையை கண்டுபிடித்து யூதர்கள் கூறிய உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டதால் மறுபடியும் ஆலயப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அடுத்த நான்கு ஆண்டுகளில் சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன.
இதன் மூலம் சபை அறிந்து கொள்ள வேண்டிய காரியங்கள்.
1. கடவுள் ஒரு வேலையை ஆரம்பித்தால், தடைகள் எவ்வளவு வந்தாலும் அந்தப் பணியை அவரே முடித்துக் கொடுப்பார்.
2.தடைகள் வரும் காலத்தில் நாம் கர்த்தரையே நம்பி இருக்க வேண்டும். மாமிசமான முயற்சிகளில் ஈடுபடாமல், காலம் நிறைவேறும் வரை காத்திருக்க வேண்டும் .
இந்த 16 ஆண்டு இடைவெளியில் யூதர்கள் பாபிலோனிய அரசுக்கு விரோதமாக கலவரத்தில் ஈடுபடவில்லை. அவர்கள் அரசு ஆணைக்கு கட்டுப்பட்டு பொறுமையாக காத்திருந்தார்கள் ்.
3. அரசாங்கத்திற்கு விரோதமாக கலவரம் செய்வது வேதத்தின் படி ஏற்றுக்கொள்ளக்கூடிய காரியம் அல்ல.
4. ஆலய சீரமைப்பு பணிகளை தொடங்க வைத்தவர் கர்த்தர். அது இடையில் நிறுத்தப்பட அனுமதித்தவரும் அவரே. இறுதியாக இன்னொரு அரசன் மூலம் அதை மறுபடியும் ஆரம்பிக்கச் செய்தவரும் அவரே. இந்த மூன்று காரியங்களிலும் தேவனுடைய இறையாண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இறையாண்மையை சரியாக புரிந்துகொண்ட எந்த கிறிஸ்தவ தலைவரும் அரசியலில் சார்பு நிலை எடுக்க மாட்டார்கள். நமது கடமை தேவனை நோக்கி மன்றாடுவது மட்டுமே.
கடவுளின் கரம் நம்மோடு இருந்தால், நாம் செய்கிற ஊழியம் கர்த்தருக்கு பிரியமானதாக இருந்தால், எதிர்ப்புகள் வந்தாலும் தடைகள் வந்தாலும் கர்த்தர் அந்த ஊழியத்தை நிலைநிறுத்துவார் என்பது இந்த நிகழ்வின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் சத்தியமாகும்.