Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எஸ்றாவின் புத்தகம் ?வேதப் பாடம் 10
உங்கள் சிந்தனைக்கு
.
எஸ்றாவின் புத்தகம்

?வேதப் பாடம் 10

சபையின் மறுமலர்ச்சிக்கும் எழுப்புதலுக்கும் முக்கியமானது எது?

தியானிக்க வேண்டிய வேதப்பகுதிகள்:
எஸ்றா 4:24; 5:1–2
ஆகாய் 1:1–16

சாலொமோன் கட்டிய தேவாலயம் இடிக்கப்பட்ட பிறகு, இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

எழுபது ஆண்டுகள் கழித்து, கோரேசு மன்னனின் ஆட்சி காலத்தில், அவர்கள் தங்கள் தேசத்திற்குத் திரும்பவும் ஆலயத்தை மீண்டும் கட்டவும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் ஆலயக் கட்டுமானப் பணிகளில் பல எதிர்ப்புகள் எழுந்தன.

கோரேசுவுக்குப் பின் ஆட்சி செய்த தரியு மன்னனின் காலத்தில் அந்தப் பணிகள் தடைபட்டன (எஸ்றா 4:24).

அதற்குக் காரணங்கள்
இரண்டு:

வெளிப்புற எதிர்ப்பு

ஜனங்களின் உள்மனத் தளர்ச்சி மற்றும் சுயநலம்.

பாபிலோனிலிருந்து திரும்பி வந்த மக்கள், தேவனுடைய ஆலயத்தை விட தங்கள் சொந்த வீடுகளை கட்டுவதில் அதிக அக்கறை காட்டினர்‌.
(ஆகாய் 1:4–9)..

இதனால் தேவனுடைய ஊழியம் சுமார் 15 ஆண்டுகள் நிறுத்தப்பட்டு விட்டது.

தேவன் எழுப்பிய இரண்டு தீர்க்கதரிசிகள்.

நிறுத்தப்பட்ட ஆலயப் பணியை மீண்டும் தொடங்கச் செய்ய, தேவன் இரண்டு தீர்க்கதரிசிகளை எழுப்பினார்:
1.ஆகாய்
2.சகரியா

இவர்களின் தீர்க்கதரிசன ஊழியம் மக்களை உணர்ச்சியூட்டியது (எஸ்றா 5:1–2).
ஆகாய் 1:14

ஆகாய் உரைத்த தேவனுடைய வார்த்தை மக்களின் இதயத்தைத் தட்டியெழுப்பியது.

ஆகாய் 1:1 முதல் 15 வரை பார்க்கும்போது, 23 நாட்களுக்குள் மக்கள் மீண்டும் ஆலயக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர்.

15 ஆண்டுகள் தடைபட்ட தேவனுடைய ஊழியம், 23 நாட்களில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது.

தேவனுடைய வார்த்தையின் வல்லமையினால்!
இதுவே தேவவசனத்தின் அதிசய வல்லமை.

இன்றைய சபைகளுக்கான எச்சரிக்கை.

இன்று பல சபைகள் தேவனுடைய வார்த்தையின் வல்லமையை உணராமல் அதை புறக்கணித்து வருகின்றன.

ஆராதனைகளில் தேவவசனத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படாமல், கடைசியில் 20 அல்லது 30 நிமிடங்கள் மட்டும் ஒதுக்கப்படுகிறது.

மக்கள் ஏற்கனவே களைத்து சோர்ந்து இருக்கும் நேரத்தில் வார்த்தை பகிரப்படுவது வேதனைக்குரிய காரியம்.

எப்போது சபை தேவவசனத்திற்கு உரிய மதிப்பு, கண்ணியம், முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணிக்க ஆரம்பித்ததோ — அன்றே அதன் வீழ்ச்சி ஆரம்பமாகிறது.

திருவசனம் சரியான முறையில் பிரசங்கிக்கப்படாதபோது:மக்கள் உண்மையான பக்தியை இழக்கிறார்கள்.

கவர்ச்சிகள் மற்றும் உணர்ச்சி ஊக்கங்கள் அவர்களை ஆட்கொள்கின்றன.
கர்த்தரைத் துதிப்பதின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

ஆனால் தேவவசனத்திற்கு உரிய இடத்தை எதுவும் நிரப்ப முடியாது.

துதியிலும் கூட வசனத்திற்கு மைய இடம் கொடுக்கப்பட வேண்டும்.

வரலாற்றுச் சாட்சி
Wesleyan revival இங்கிலாந்தில் ஏற்பட்ட எழுப்புதல், பிரான்சு நாட்டில் நிகழ்ந்த இரத்தப் புரட்சிக்கால கலவரங்களிலிருந்து இங்கிலாந்து தேசத்தை காத்தது என்று பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த எழுப்புதலின் மையக் காரணம் — தேவனுடைய வசனப் பிரசங்கமே.

இன்றைய அவசியம்
இன்று தேவன் தேடுவது:
சமநிலையுடன் வேதத்தை போதிக்கும் போதகர்கள்.

வசனத்தை நேசிக்கும் விசுவாசிகள்.

கட்டுக்கதைகள், பொய் தீர்க்கதரிசனங்கள், ஏமாற்றும் வாக்குறுதிகளிலிருந்து விடுதலை பெறும் சபைகள்

தேவனுடைய வசனத்தால் கட்டப்படாத எந்த ஊழியமும் காலப்போக்கில் அழிந்து போகும்.
அது அடுத்த தலைமுறையை எட்டாது.

வேதாகம மனிதர்களின் எடுத்துக்காட்டு
மோசே, யோசுவா

இவர்கள் ஆவிக்குரிய வெற்றியை அடைந்ததற்குக் காரணம்,
தேவவசனத்தை தியானித்து அதற்கு கீழ்ப்படிந்ததே.

ஒரு சபை மேய்ப்பன்:
வேத வசனத்திற்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறார்?
எவ்வளவு ஆழமாக தியானிக்கிறார்?
எவ்வளவு பொறுப்புடன் போதிக்கிறார்?
அதன்படி அவரது செய்தியின் ஆழம் வெளிப்படும்.

ஆழமில்லாத தயாரிப்பில்லா செய்தி சபையை உயிர்ப்பிக்காது.

ஆழமான தியானத்தில் உருவாகும் செய்திதான் சபைக்கு உயிர் ஊட்டும்.

அப்போஸ்தலர் பவுல் இரவு முழுவதும் பிரசங்கித்தபோதும் மக்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.

இன்று பல இடங்களில், செய்திக்குள் ஆழமின்மையால் மக்கள் சோர்ந்து விடுகின்றனர்.

முடிவுரை

தமிழகத்தில் சபைகள் எழுப்புதல் அடைய வேண்டுமெனில்:
வேத வசனத்தை நேசிக்கும் மேய்ப்பர்கள், மற்றும் விசுவாசிகள் எழ வேண்டும்.

தியானிக்கும் போதகர்கள் விசுவாசிகள் எழ வேண்டும்.

சமநிலையில் போதிக்கும் வேத போதகர்கள் எழ வேண்டும்.

வசனத்திற்கு முதன்மை இடம் கொடுக்கும் சபைகள் உருவாக வேண்டும்.

தேவனுடைய வார்த்தையே சபையின் உயிர்.

தேவனுடைய வார்த்தையே மறுமலர்ச்சியின் மூலாதாரம்.