Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

சங்கீதங்கள் — வேத பாடம் 5 *தியானப் பகுதி: சங்கீதம் 2* *சங்கீதம் 2 — “Royal Psalm” (அரச சங்கீதம்)
*உங்கள் சிந்தனைக்கு*

*சங்கீதங்கள் — வேத பாடம் 5*

*தியானப் பகுதி: சங்கீதம் 2*

*சங்கீதம் 2 — “Royal Psalm” (அரச சங்கீதம்)*

*இரண்டாவது சங்கீதம் இன்று வேத அறிஞர்களால் “Royal Psalm” — “அரச சங்கீதம்” என்று அழைக்கப்படுகிறது* .
*சங்கீதம் 2-ஐப் போன்ற அளவுக்கு புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சங்கீதம் வேறு எதுவும் இல்லை. ஏறக்குறைய 18 இடங்களில் இந்தச் சங்கீதத்தின் வசனங்கள் அல்லது கருத்துகள் குறிப்பிடப்படுகின்றன.*
இதுமட்டுமல்லாமல், *சங்கீதம் 2 “Messianic Psalm” — “மேசியாவைக் குறித்த சங்கீதம்” என்றும் அழைக்கப்படுகிறது.*
“Royal Psalm” என்பது வேதத்தில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான பெயர் அல்ல. சங்கீதங்களின் இலக்கிய வகையையும் அவற்றின் உள்ளடக்கத்தையும் ஆய்வு செய்யும் வேத அறிஞர்கள் பயன்படுத்தும் ஒரு வகைப்பெயராகும்.
ஏன் சங்கீதம் 2 “Royal Psalm” என்று அழைக்கப்படுகிறது?
*ராஜா, அபிஷேகம், சிங்காசனம், ஆட்சி, எதிரிகள், ஜாதிகள் மீது அதிகாரம் ஆகியவை இந்தச் சங்கீதத்தின் முக்கியமான கருத்துகளாக இருப்பதால், இது “Royal Psalm” என்று அழைக்கப்படுகிறது.*
சங்கீதம் 2:2, 6–8, 10–12 ஆகிய வசனங்களில் இந்தக் கருத்துகள் தெளிவாகக் காணப்படுகின்றன.
இந்த உலகத்தில் நம்முடைய கண்களுக்குத் தெரியும் அரசாங்கங்களும் ஆளுகை அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்கள் சில நேரங்களில் தேவனுக்கும் தேவனுடைய சுவிசேஷத்திற்கும் எதிராக நிற்கும் சூழ்நிலைகளை நாம் பார்க்கிறோம். சில வேளைகளில், தேவனுடைய அரசாங்கத்தையும் அதன் நோக்கங்களையும் இந்த உலகத்தில் நிலைத்திருக்க விடாமல் அழிக்க நினைக்கும் சக்திகள் இருப்பதுபோலத் தோன்றலாம்.
இவற்றைப் பார்க்கும்போது விசுவாசிகள் சோர்ந்து போகக்கூடும்.
*ஆனால் சங்கீதம் 2 நமக்கு ஒரு மிகப்பெரிய உண்மையை நினைவுபடுத்துகிறது: நம்முடைய கண்களுக்குப் புலப்படும் ஆட்சிகளுக்கு மேலாக, கண்ணுக்குப் புலப்படாத தேவனுடைய ஆட்சி* *இருக்கிறது* .
மனித அரசாங்கங்கள் தங்கள் அதிகாரத்தைப் பற்றி பெருமைப்படலாம். *ஆனால் தேவனுடைய சிங்காசனம் அசைக்கப்படுவதில்லை* .
அதனால்தான் சங்கீதக்காரன்:
“அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்;

*பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள்.”*

— சங்கீதம் 2:10
என்று எச்சரிக்கிறார்.
மேலும்,
“பயத்துடன் கர்த்தரைச் சேவியுங்கள்;

நடுக்கத்துடன் களிகூருங்கள்.”

— சங்கீதம் 2:11
என்று கூறுகிறார்.
இங்கு நாம் இன்னொரு முக்கியமான உண்மையையும் நினைவில் கொள்ள வேண்டும். *சாத்தானுக்கு தனிப்பட்ட, வரம்பற்ற அதிகாரம் கிடையாது* .

*He has delegated power*
*அவனுடைய செயல்பாடுகளும் தேவனுடைய இறையாண்மைக்கு அப்பாற்பட்டவை அல்ல. அவனுடைய* அதிகாரம் தேவனுடைய அனுமதிக்கும் எல்லைக்குள் மட்டுமே செயல்படுகிறது.
*எனவே, நம்முடைய தேசத்தில் என்ன நடந்தாலும், இந்த உலகத்தின் ஆட்சிகளுக்கு மேலாக அவற்றைக்* *கட்டுப்படுத்துகிற தேவனுடைய ஆட்சி இருக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு* *மிகப்பெரிய விசுவாசத்தையும் ஆறுதலையும் தருகிறது.*
இந்தக் கூடார வாழ்க்கையில் நம்மீது இறுதி அதிகாரம் செலுத்துகிறவர்கள் இந்த உலகத்தின் அரசாங்கங்கள் அல்ல. நம்முடைய இறுதி அரசன் தேவனே.
கண்ணுக்குப் புலப்படாத தேவனுடைய ஆளுகை விண்ணிலும் மண்ணிலும் காணப்படுகிறது. நாம் அடையப்போகிற அசைக்க முடியாத ராஜ்யத்தை நினைத்துப் பார்க்கும்போது, இப்போது நம்மைச் சுற்றிலும் காணப்படும் அசைந்து கொண்டிருக்கும் அரசாங்கங்களைப் பற்றிய பயத்தில் நாம் வாழ வேண்டியதில்லை.
ஒவ்வொரு தேசத்திற்கும் தேவன் எல்லைகளையும் காலங்களையும் நிர்ணயித்திருக்கிறார். மனித அரசாங்கங்களும் தேவனுடைய இறையாண்மைக்கு அப்பாற்பட்டவை அல்ல.
பிசாசின் செயல்பாடுகள்கூட தேவனுடைய இறையாண்மையைத் தாண்டி நம்மை ஆள முடியாது.
இதுவே சங்கீதம் 2 நமக்குக் கொடுக்கும் மிகப்பெரிய பாடம்:
இந்த உலகத்தில் அரசாங்கங்கள் மாறலாம்; ஆட்சியாளர்கள் மாறலாம்; சூழ்நிலைகள் மாறலாம். ஆனால் தேவனுடைய சிங்காசனம் அசையாது. அவருடைய அபிஷேகம் பெற்ற ராஜாவாகிய கிறிஸ்துவின் ஆட்சி நிலைத்திருக்கும். ஆகவே, நாம் பயப்படாமல் தேவனை நம்பி வாழ வேண்டும்.
கடவுளுடைய பணியில்,

எசேக்கியல் சண்முகவேல்